5 நிமிட எனர்ஜி கதை #carrentalinchennai #chennaicarrentals #carrentalserviceinchennai
கஷ்டப்பட்டு உழைத்து, ஆம் பிறரை விட சற்று அதிகமாகவே கஷ்டப்பட்டுத்தான்… பள்ளிப்படிப்பை முடித்துவிட்டாள் அவள். நல்ல மதிப்பெண். அந்த ஊர் கல்வித்திட்டப்படி மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்து பள்ளி மேல்நிலை படிப்புக்காக இங்கு மீண்டும் கஷ்டப்பட்டு சேர்ந்துவிட்டாள். சேர்த்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, என்ன கேட்டு புண்படுத்துவார்களோ என்ற எல்லா தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக சேர்ந்து முதல் நாள் வகுப்புக்காக வந்துவிட்டாள். வந்தவளுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி, வகுப்பு மூன்றாம் தளத்திலாம். பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் என்றால் பல தளங்கள் இருப்பதும், அதில் பெரும்பாலும் மேல் தளங்களை மாணவர்கள் விரும்புவதும் வழக்கமானது தானே? அதிலென்ன அதிர்ச்சி? ஏனென்றால், இவள் வழக்கமானவள் அல்ல. பிறக்கும்பொழுதே இரு கைகளும் இரு கால்களும் இல்லாமல் பிறந்தவள். தனது இரு முழங்கைகளாலேயே எழுதிப் பழகி படித்து இந்த வகுப்புவரை வந்தவள். அவளுக்குத்தான் தனது வகுப்பு மூன்றாம் தளம் என்றதும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி நீண்ட நேரமில்லை. ‘ஜாரா’வுக்கு இது வழக்கமானது தான். அதுவரை வாழ்வில் அவளுக்கு எதுவும் சுலபமாக இருந்ததில்லை, போராடப் பழகியே இருந்தாள்.
“எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ‘உங்களின் பெரிய சவால் எது?’, ‘இந்த சவாலை எப்படி சந்திக்கிறீர்கள்?’ என்றெல்லாம். எனக்கு என் சவால்கள் பெரிதாகத் தெரியவில்லை. இரு கால்களால் நடப்பது எப்படிப்பட்ட உணர்வாக இருக்குமென்பது எனக்கு தெரியவே தெரியாது. என் வாழ்க்கையே இப்படித்தான் தொடங்கியது. முதல் சவால் என் பெற்றோருக்குத் தான். என்னை வளர்த்தது, படிக்க வைத்தது, பிற குழந்தைகள் மத்தியில் என்னை சேர்த்தது என அனைத்துமே அவர்களுக்குப் பெரிய சவால் தான். அவர்கள் எப்படி அதைக் கடந்தார்கள் என்று தினம் தினம் நினைக்கிறேன்”, ஒரு பேட்டியில் இப்படி கூறியவர் 26 வயது ஜாரா அப்பாஸ்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் இந்தப் பெண், இரு கைகளும் கால்களும் இல்லாத குறையை சற்றும் கருதாமல், தன் பள்ளிக்கல்வியில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று, அதற்காக மாநில முதல்வரிடம் தங்கப் பதக்கம் பெற்றவர். மூன்றாம் தளத்தில் வகுப்பறை என்றாலும் பெற்றோர், நண்பர்கள் உதவியுடன், முக்கியமாக தன் நம்பிக்கையால், மேலாண்மைக் கல்வியில் இளங்கலை முடித்து, பின்னர் முதுகலையும் படித்தவர். கல்விக்குப்பின் அவர் தேர்ந்தெடுத்த பணிதான் சிறப்புத் திறனாளிகளிலேயே அவரை இன்னும் சிறப்பான திறனாளியாக்கியிருக்கிறது. ஆம், ஒரு இடத்தில் இருந்து செய்யும் அலுவலகப் பணியை தேர்ந்தெடுக்காமல், தன் குறையை மீறி தான் வாழும் தைரியத்தை, நம்பிக்கையை பிறருக்கும் பரப்ப, ஒரு பயிற்சி நிறுவனத்தில் பணிநிமித்த பயிற்சியாளராக, உத்வேக பேச்சாளராக (Motivational Speaker) பணியாற்றுகிறார். #நன்றி:#நக்கீரன்
Leave a Comment